ஓசூர் அருகே, வனத்துறையினரை விரட்டிய காட்டு யானைகள்
ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளும் வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டபள்ளி வனப்பகுதியில் நீண்ட நாட்களாக 2 யானைகள் சுற்றித் திரிந்தன. இந்த யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கெலவரப்பள்ளி அணை பகுதியில் புகுந்தன. பின்னர் அவைகள் இப்பகுதியிலேயே முகாமிட்டு சுற்றி வருகின்றன. இதன் காரணமாக அணையை சுற்றியுள்ள கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி, சித்தனபள்ளி, நந்திமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கெலவரப்பள்ளி அணையில் 2 யானைகளும் ஆனந்த குளியல் போட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அந்த 2 யானைகளும் ஆக்ரோஷம் அடைந்து வனத்துறையினரை விரட்டத் தொடங்கின.
இதனால் அச்சம் அடைந்த வனத்துறையினர் அங்கிருந்து தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த யானைகள், அணை அருகேயுள்ள தைலத்தோப்பில் புகுந்தன. இந்த யானைகளின் நடமாட்டத்தை, 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும், 2 யானைகளில், கோணக்கொம்பு என்ற யானை முரட்டுத்தனத்துடன் காணப்படுவதால் அதனை கும்கி யானையை வரவழைத்து விரட்டுவது அல்லது 2 யானைகளுக்கும் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கெலவரப்பள்ளி அணை பகுதியிலிருந்து வெளியேற்றுவது என வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறினர். இதனிடையே நேற்று பெங்களூருவிலிருந்து மயக்க ஊசி செலுத்தும் நிபுணர், கெலவரப்பள்ளி அணை பகுதிக்கு நேரில் வந்து யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்துவதற்கான சாத்தியமுள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டார்.
இதே போல நொகனூர் காப்புக்காட்டில் இருந்து காட்டு யானை ஒன்று தேன்கனிக்கோட்டைக்குள் புகுந்தது. ஊருக்குள் யானை புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து பயந்து ஓடினர். இதைத் தொடர்ந்து அந்த யானை பட்டாளம்மன் ஏரியில் தண்ணீர் குடித்து விட்டு சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
Related Tags :
Next Story