காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்


காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Aug 2019 11:15 PM GMT (Updated: 5 Aug 2019 8:07 PM GMT)

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பதற்கான காரணத்தை மு.க.ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என திருவண்ணாமலை வந்த பா.ஜ.க.மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருவண்ணாமலை,

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு பிரமாண்டமான சூழ்நிலை இன்று இந்தியாவில் நிலவுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு பிரிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் இன்று நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட்டு தீவிரவாதம் தடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மக்களும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களைப்போல திட்டங்கள், நிதி ஒதுக்கீடு அத்தனையும் அனுபவிக்கும் அளவிற்கு சமுதாய பங்கீட்டை இன்றைய சூழ்நிலை உருவாக்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் இதை இந்தியாவின் கருப்பு நாள் என்று கூறுகிறார்கள். இல்லை, இது வேற்றுமையை சுட்டெரித்த நெருப்பு நாள் என்று என்னால் சொல்ல முடியும்.

சர்தார் வல்லபாய் படேல் நாட்டில் உள்ள மாகாணங்களை இணைத்தார். அதேபோல் நவீன இரும்பு மனிதரான பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் காஷ்மீர் என்ற மாகாணத்தை இந்தியாவோடு இணைத்து, அதற்கான அதிகாரத்தை முழுவதுமாக கொடுத்து முடிவை எடுத்துள்ளார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்கது. அதனால் தான் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி கட்சி, மாயாவதி கட்சி, தெலுங்கானா கட்சி, இதுபோல மாநிலங்களை ஆளுகின்ற கட்சிகளும், எதிர்க் கட்சிகளும் பாராட்டி, சீராட்டி வரவேற்றுள்ளார்கள்.

இதை ஜனநாயக படுகொலை என்று ஸ்டாலின் சொல்கிறார். ஜனநாயகம் இன்று இந்த நாட்டில் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. என்ன காரணத்திற்காக எதிர்க்கிறீர்கள். இந்த நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டாமா?. இந்த நாட்டில் உள்ள உரிமை அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?

ஸ்டாலின் இந்த தீர்மானத்தை ஏன் எதிர்க்கிறார்? என்பதற்கான காரணத்தை சொல்லவேண்டும். எந்த விதத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். காஷ்மீர் மக்கள் தொகை, இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் தான் இருக்கிறார்கள். ஆனால் இந்திய பட்ஜெட்டில் 10 சதவீதம் சிறப்பு அந்தஸ்துக்காக செலவிடப்பட்டும் அந்த மக்கள் இன்னும் வளர்ச்சியை பார்க்காமல் தான் உள்ளனர்.

மற்ற மாநிலங்களுக்கு கிடைக்கின்ற திட்டங்கள் அத்தனையும் ஜம்முகாஷ்மீர் பகுதி மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தற்போது நாடு சமநிலை ஆகிவிட்டது. அதனால் இது வரலாற்றில் மிக சிறப்பான ஒரு நாள். பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

காஷ்மீரில் தீவிரவாதம் நீக்கப்பட்டு, பிரிவினை ஒடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஏன் ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்கவில்லை. பா.ஜனதாவுக்கு எதிராக தனது நடவடிக்கை இருந்தால் மட்டும் தான் தமிழக மக்கள் தன்னை ஒப்புக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறார். ஸ்டாலினின் இரட்டை நிலையை தமிழக மக்கள் இன்று நன்கு புரிந்து கொள்வார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றேன். நாங்கள் செல்லும் இடமெல்லாம் தமிழக மக்களின் அமோக வரவேற்பு உள்ளது. வருகிற 9-ந் தேதி அகில இந்திய உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளரான மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் மதுரை வருகிறார்.


இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ஊடக பிரிவு மாநில செயலாளர் பிரசாத், மாவட்டத் தலைவர் நேரு, மாவட்ட பொதுச் செயலாளர் ஜீவானந்தம், சோலை உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story