சொத்து மதிப்பீடு சான்றிதழ் வழங்க, விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


சொத்து மதிப்பீடு சான்றிதழ் வழங்க, விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2019 4:15 AM IST (Updated: 6 Aug 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

சொத்து மதிப்பீடு சான்றிதழ் வழங்க விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 55), விவசாயி. இவர் தனது நிலத்துக்கு சொத்து மதிப்பீடு சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக ரங்கநாதன்(38) என்பவர் பணியாற்றி வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் காடையாம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் மணி சொத்து மதிப்பீடு சான்றிதழ் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதனை சந்தித்தார். அப்போது அவர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ராஜா ஆகியோர் மணியிடம் சொத்து மதிப்பீடு சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். மேலும் இந்த பணத்தை தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்குமாறும் அவரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி மணி, இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அறிவுரையின் பேரில் மணி நேற்று கிராம நிர்வாக அலுவலரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை ரங்கநாதனிடம் கொடுத்தார். அப்போது அவரிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர் பணத்தை வாங்கினார்.

அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய ரங்கநாதனை கையும், களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிராம நிர்வாக உதவியாளர் ராஜா மீதும் போலீசார் வழக்குப்பதிவு அவரை தேடி வருகின்றனர்.

Next Story