தந்தையின் சட்டைப்பையில் தினமும் ரூ.100 திருட்டு: பணம் கேட்டு மிரட்டியதால், 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி - 4 பேர் கைது


தந்தையின் சட்டைப்பையில் தினமும் ரூ.100 திருட்டு: பணம் கேட்டு மிரட்டியதால், 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி - 4 பேர் கைது
x

பெங்களூருவில், தந்தையின் சட்டைப்பையில் தினமும் ரூ.100 திருடிய 10-ம் வகுப்பு மாணவனிடம் ரூ.2.50 லட்சம் பறித்ததோடு, தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் அந்த மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பைரதி கிராமத்தில் வசித்து வருபவர் ஒப்பந்ததாரர். இவர் புதிய வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் கட்டி கொடுத்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மகன் இருக்கிறான். அவன் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தனது தந்தையின் சட்டைப்பையில் இருந்து பள்ளிக்கு செல்லும்போது தினமும் ரூ.100 திருடி வந்துள்ளான். அந்த பணத்தில் அவன் தனது நண்பர்களுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து வந்துள்ளான். 9-ம் வகுப்பு படித்த போதில் இருந்தே தந்தையின் பையில் இருந்து அவன் பணம் எடுக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ரகீம் என்பவர் அறிந்தார். இதையடுத்து அவர் தனது நண்பர்களான பைரதி கிராமத்தை சேர்ந்த சுராஜ், வசந்த், கெம்பேகவுடா லே-அவுட்டை சேர்ந்த முகமது நவாஸ், முகமது அகிப், சமீர் ஆகியோருடன் சேர்ந்து மாணவனை மிரட்ட தொடங்கினார். அதாவது, திருட்டு குறித்து வீட்டில் கூறிவிடுவதாக அவர்கள் மிரட்டினார்கள். வீட்டில் கூறாமல் இருக்க பணம் வழங்கும்படி கேட்டுள்ளனர்.

இதனால் பயந்துபோன மாணவன் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என்று வீட்டில் இருந்து தந்தைக்கு தெரியாமல் திருடி கொடுத்து வந்துள்ளான். இவ்வாறாக ரூ.2.50 லட்சம் வரை மாணவன் அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளான். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மாணவனுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவன் சம்பவத்தன்று தனது வீட்டின் கழிவறைக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனுடைய பெற்றோர் உடனடியாக மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் சம்பவம் குறித்து கொத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின் அடிப்படையில் மாணவனை மிரட்டி பணம் பறித்ததாக சுராஜ், வசந்த், முகமது நவாஸ், முகமது அகிப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேருக்கும் 19 வயது முதல் 20 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள ரகீம் மற்றும் சமீர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story