மீனவர் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை


மீனவர் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 5:42 PM GMT)

சீர்காழி அருகே மீனவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம மனிதர்கள், 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சுனாமி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் இளையராஜா(வயது 32). மீனவரான இவர், நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொள்ளிடம் அருகே உள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவுக்கு சென்றார்.

இளையராஜா குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டதை நன்கு தெரிந்த மர்ம மனிதர்கள், இளையராஜா வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பீன்னர் வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்து 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

நேற்று மாலை திருவிழா முடிந்த பின்னர் இளையராஜா தனது குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் கொள்ளை போய் உள்ளதை கண்டு இதுகுறித்து சீர்காழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளையர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. கொள்ளை போன நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் என கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மீனவர் ஒருவர் வீட்டில் இருந்து 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் கொள்ளை போன சம்பவம் திருமுல்லைவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story