பூந்தமல்லி பணிமனையில் பஸ்சில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டியபோது தவறி விழுந்த ஊழியர் பலி


பூந்தமல்லி பணிமனையில் பஸ்சில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டியபோது தவறி விழுந்த ஊழியர் பலி
x
தினத்தந்தி 6 Aug 2019 9:45 PM GMT (Updated: 6 Aug 2019 8:43 PM GMT)

பூந்தமல்லி அரசு பஸ் பணிமனையில் பஸ்சில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டியபோது ஊழியர் ஒருவர் தவறி விழுந்ததில் பரிதாபமாக பலியானார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பணிமனையில் அரசு பஸ்களை பராமரிக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை அரக்கோணத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 56) என்ற ஊழியர் அரசு பஸ் ஒன்றின் முன் பகுதியில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டதும் உடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அவரை மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பணிமனையில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி செய்துதரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு பஸ்களை இயக்காமல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, ஊழியர்கள் மீண்டும் பஸ்களை இயக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடபழனி பணிமனையில் அரசு பஸ் சுவரின் மீது மோதியதில் போக்குவரத்து ஊழியர்கள் 2 பேர் இறந்துபோனார்கள். இந்நிலையில், தற்போது பூந்தமல்லி பணிமனையில் ஊழியர் ஒருவர் பணியின்போது தவறி விழுந்து இறந்துபோன சம்பவம் அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story