திருவேற்காட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்


திருவேற்காட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Aug 2019 3:00 AM IST (Updated: 7 Aug 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

திருவேற்காட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1½ டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பூந்தமல்லி, 

கொரட்டூர் போலீசார் சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜேஷ் (என்ற) லோகநாதன் (வயது 30). ரவுடியான இவரை கடந்த சில நாட்களாக போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ராஜேஷ் திருவேற்காடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவேற்காடு, சின்ன கோலடி பகுதியை சேர்ந்த கோபி (42) என்பவரது வீட்டில் போலீசார் நேற்று காலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவரது வீட்டில் இருந்த ஒரு அறையை திறந்து பார்த்தபோது, அதில் 1½ டன் எடைகொண்ட 33 செம்மரக்கட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், வீட்டிலிருந்த கோபியிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், ராஜேஷுக்கு நண்பரான கோபி பணம் தர வேண்டியது இருந்ததாகவும், பணத்தை திருப்பித்தரும் வரை கோபியின் வீட்டில் செம்மரக்கட்டைகளை வைத்து விட்டு ராஜேஷ் சென்று விட்டதாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கோபி தச்சுவேலை செய்து வருவதால் செம்மரத்தால் கட்டில் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் நோக்கில், அவர் செம்மரங்களை வாங்கி வீட்டில் வைத்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கோபியை போலீசார் கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை திருவள்ளூர் வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story