கபடி வீரர் கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


கபடி வீரர் கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Aug 2019 10:15 PM GMT (Updated: 6 Aug 2019 9:32 PM GMT)

நாமக்கல் அருகே கபடி வீரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் மணிகண்டன் (வயது22). சிறந்த கபடி வீரரான மணிகண்டன், தமிழக அணி சார்பில் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடி தங்கப்பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்று உள்ளார். நடிகர் விக்ரமின் தீவிர ரசிகரான மணிகண்டன் கடந்த 2017-ம் ஆண்டு தூசூரில் விக்ரம் ரசிகர் மன்றத்தை தொடங்கி, அதன் தலைவராகவும் இருந்து வந்தார். இங்கு ரசிகர் மன்றம் தொடங்குவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்பவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி இரவு தூசூர் மாரியம்மன் கோவில் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மணிகண்டன் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன், அவரது தம்பிகள் ரகுராமன் (27), ரவிச்சந்திரன் (25) மற்றும் ராஜேஷ் (22), மணி என்கிற மணிகண்டன் (27), தனபால் (24) மற்றும் கருணாமூர்த்தி (26) மற்றும் 18 வயது இளைஞர் ஒருவர் என 8 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் வாதாடினார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி தனசேகரன் குற்றம்சாட்டப்பட்ட ராமச்சந்திரன், ரகுராமன், ரவிச்சந்திரன், தனபால், ராஜேஷ், மணிகண்டன், கருணாமூர்த்தி என 7 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே, இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 18 வயது சிறுவன் மீதான விசாரணை நாமக்கல்லில் உள்ள இளைஞர் நீதி குழுமத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story