பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரிசெய்யக்கோரி, அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் போராட்டம் - விழுப்புரத்தில் பரபரப்பு
பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரி செய்யக்கோரி விழுப்புரத்தில் அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் விழுப்புரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் குடிநீர், போதுமான நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடங்களும் திறக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில் தற்போது கல்லூரியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிது. ஏற்கனவே சுத்திகரிப்பு எந்திரம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த எந்திரம் பழுதடைந்ததால் குடிநீர் வழங்கப்படவில்லை.
இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று மதியம் திடீரென வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்து கல்லூரி முன்பு திரண்டனர். தொடர்ந்து, பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை விரைந்து சரி செய்யக்கோரி கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்ததும் கல்லூரி முதல்வர் மாதவி, விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சுத்திகரிப்பு எந்திரத்தை சரிசெய்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கூறினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டுச்சென்றனர். இந்த போராட்டத்தினால் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story