வானவில் : போர்ஷே மெக்கான் அறிமுகம்
ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு போர்ஷே நிறுவனம் தனது பிரபல மெக்கான் பிராண்டில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட காரை அறிமுகம் செய்துள்ளது.
நான்கு சிலிண்டர்களைக் கொண்ட இந்த மாடல் காரின் விலை ரூ.69.98 லட்சமாகும். வி6 என்ஜினைக் கொண்ட மெக்கான் எஸ் மாடல் விலை ரூ.85.03 லட்சம் ஆகும். கோடீஸ்வரர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் வாங்கும் வகையில் காரின் விலையை நிர்ணயித்து உள்ளது இந்நிறுவனம்.
மெக்கான் மாடல் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இது 252 ஹெச்.பி. திறன், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. மெக்கான் எஸ் மாடல் 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இது 354 ஹெச்.பி. திறன், 480 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. இந்த மாடல் காரை ஸ்டார்ட் செய்து 5.3 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதில் மணிக்கு 254 கி.மீ. தூரம் பயணிக்க முடியும். இதில் எல்.இ.டி. விளக்கு வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. பம்பரும் முகப்பு விளக்கும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய வண்ணங்களில் இது வந்துள்ளது.
கரும்பச்சை மெட்டாலிக், டோலமைட் சில்வர் மெட்டாலிக், மியாமி புளூ, கிரேயான் ஆகியவை புதுமையான வண்ணங்களாகும். இதுவும் இன்டர்நெட் இணைப்பு கொண்ட வாகனமாகும். 10.9 அங்குல தொடு திரை உள்ளது. நிறுவனம் இந்த மாடலில் பேட்டரி காரை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மெக்கான் மாடல் பேட்டரி கார் 2021-ல் வெளிவரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் டேகான் மாடல் கார் பேட்டரியில் ஓடும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story