தேசிய கைத்தறி தினவிழா: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


தேசிய கைத்தறி தினவிழா: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 8 Aug 2019 4:45 AM IST (Updated: 7 Aug 2019 8:57 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் நடந்த தேசிய கைத்தறி தினவிழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர்,


கரூரில் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் தேசிய கைத்தறி தின விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

கரூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் துறையாக கைத்தறி துறை உள்ளது. எனவே, நாடுமுழுவதும் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டாலும், நமது கரூர் மாவட்டத்தில் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். கைத்தறி நகரம் என்ற பெருமையை பெற்ற ஊர் நமது கரூர். கைத்தறி துறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, கைத்தறி வியாபாரத்தை உலகம் முழுவதும் நமது முன்னோர்கள் கொண்டு சென்றுள்ளனர். கைத்தறியாக இருந்தவை விசைத்தறியாக மாறி, அறிவியல்ரீதியான பல்வேறு முன்னேற்றங்களை அடைந்த துறையாக கைத்தறி துறை விளங்குகின்றது.


மறைந்த தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை, மானிய உதவிகளை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அவர்களின் வழியில் செயல்படும் தற்போது முதல்–அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட்டுகளும், விசைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 750 யூனிட்டுகளும் மின்சாரம் வழங்கப்படுகின்றது. கரூர் மாவட்டத்தில் இதுவரை, 110 பேருக்கு ரூ.2 கோடியே 86 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.

நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 2018–19ம் ஆண்டிற்கு 809 நெசவாளர்களுக்கு ரூ.4 கோடியே 04 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1,183 நெசவாளர்கள் பயன்பெற்றுவருகின்றனர். கோ–ஆப்டெக்ஸ் உற்பத்தி திட்டத்தின் கீழ் கரூர் சரகத்தில் உள்ள நெசவாளர் சங்கங்களில் இருந்து 2018–19–ம் ஆண்டிற்கு ரூ.3 கோடியே 60 லட்சம் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, குடும்ப ஓய்வூதிய திட்டம், நெசவாளர் காப்பீட்டுத்திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து நெசவாளர்களும் இத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்ந்து நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குடுமபத்தினருக்கான இலவச மருத்துவ முகாமை அமைச்சர் தொடங்கி வைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த கைத்தறி கண்காட்சியினையும் பார்வையிட்டார்.

இதில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கைத்தறித்துறை துணை இயக்குனர் விஜயலெட்சுமி, முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் சிவக்குமார், வட்டாட்சியர் அமுதா, நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா, மாவட்ட கழக துணை செயலாளர் சிவசாமி, கரூர் ஒன்றிய கழக செயலாளர் கமலக்கண்ணன், நகர அவைத்தலைவர் மலையம்மன்நடராஜன், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story