வனப்பகுதியில் பலத்த மழை, குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை
வனப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று முன்தினம் வால்பாறை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குரங்கு நீர்வீழ்ச்சியில் நேற்று காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று மாலை திடீரென்று குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அருவியில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பை தாண்டி தண்ணீர் விழுந்தது. பாறை, மண், மரக்கட்டைகள் மற்றும் பாறைகள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன.
குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத் துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் பாதை மூடப்பட்டது.
வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரடைந்து பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையார் அணைக்கு வினாடிக்கு 2,978 கன அடியும், பரம்பிக்குளத்திற்கு வினாடிக்கு 2,186 கன அடியும், ஆழியாறுக்கு வினாடிக்கு 215 கன அடியும் நீர்வரத்து உள்ளது.
இதனால் சோலையார் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 10 அடி வரை உயர்ந்து 97 அடியாக உள்ளது. நேற்று காலையில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் குடைகளை பிடித்தபடி சென்றனர்.
பிளாஸ்டிக் பைகளை தலையில் அணிந்தபடி தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் தேயிலை இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். வால்பாறை பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கும் அக்காமலை தடுப்பு அணை நிரம்பி வழிந்தது. கருமலை இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வால்பாறை-பொள்ளாச்சி ரோடு புதுத்தோட்டம் அருகே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சோலையார் 64, பரம்பிக்குளம் 5, ஆழியாறு 15.6, திருமூர்த்தி 4, அமராவதி 4, வால்பாறை 64, மேல்நீராறு 107, கீழ்நீராறு 98, காடம்பாறை 27, சர்க்கார்பதி 37, வேட்டைக்காரன்புதூர் 18.2, மணக்கடவு 48.6., தூணக்கடவு 47, பெருவாரிபள்ளம் 47., அப்பர் ஆழியாறு 14,, நவமலை 9, பொள்ளாச்சி 33, நல்லாறு 8., நெகமம் 34, சுல்தான்பேட்டை 11 , கோமங்கலம்புதூர் 15.
Related Tags :
Next Story