நாசரேத்தில் துணிகரம், வீட்டில் தூங்கிய இளம்பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு


நாசரேத்தில் துணிகரம், வீட்டில் தூங்கிய இளம்பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 10:00 PM GMT (Updated: 7 Aug 2019 10:47 PM GMT)

நாசரேத்தில் வீட்டில் தூங்கிய இளம்பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாசரேத்,

தட்டார்மடம் அருகே படுக்கப்பத்து மேல தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யா தேவி (25).

மணிகண்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் தன்னுடைய மனைவியுடன், நாசரேத் வகுத்தான்குப்பத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். அங்கு நேற்று முன்தினம் இரவில் அனைவரும் தூங்கினர். அப்போது அவர்கள், காற்றோட்டத்துக்காக கதவை திறந்து வைத்து இருந்தனர்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர் நள்ளிரவில் நைசாக அந்த வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர், அங்கு தூங்கி கொண்டிருந்த திவ்யா தேவியின் கழுத்தில் அணிந்து இருந்த 6½ பவுன் தங்க தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது கண்விழித்த அவர், ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டார். மேலும் அவர் தனது நகையை கைகளால் இறுக பிடித்து கொண்டார்.

உடனே மர்மநபர் மிளகாய் பொடியை அவர் மீது வீசி, நகையை பிடித்து இழுத்து பறிக்க முயன்றார். இதில் நகை 2 துண்டானது. மர்மநபரின் கையில் கிடைத்த 3 பவுன் நகையுடன் இருளில் தப்பி ஓடி விட்டார். திவ்யா தேவியின் கையில் 3½ பவுன் நகை இருந்தது.

இதற்கிடையே கண் விழித்த மணிகண்டன் மற்றும் உறவினர்கள் மர்மநபரை விரட்டிச் சென்றனர். ஆனாலும் மர்மநபரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் தூங்கிய இளம்பெண்ணிடம் நகை பறித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story