தூத்துக்குடி கோர்ட்டில் தினமும் விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து டிஜிட்டல் அறிவிப்பு பலகை


தூத்துக்குடி கோர்ட்டில் தினமும் விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து டிஜிட்டல் அறிவிப்பு பலகை
x
தினத்தந்தி 7 Aug 2019 10:45 PM GMT (Updated: 7 Aug 2019 10:47 PM GMT)

தூத்துக்குடி கோர்ட்டில் தினமும் விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து வக்கீல்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் நேற்று திறந்து வைத்தார்.

தூத்துக்குடி,

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அனைத்து கோர்ட்டுகளிலும், தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் குறித்த விவரத்தை பொதுமக்கள் அறியும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை பொருத்த உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடியில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளன. கோர்ட்டின் உள்பகுதியில் வக்கீல்கள் பார்ப்பதற்கு வசதியாகவும், கோர்ட்டு அறைக்கு வெளியில் பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாகவும் அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த அறிவிப்பு பலகையில் அன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகள், வாய்தா போடப்பட்ட வழக்குகள், வாய்தா தேதி உள்ளிட்ட விவரங்கள் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இருக்கும். இதனை பொதுமக்கள் பார்வையிடலாம்.

இந்த டிஜிட்டல் அறிவிப்பு பலகை திறப்பு விழா நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் தலைமை தாங்கி, டிஜிட்டல் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி குமார் சரவணன், முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவஞானம், 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கவுதமன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சாமுவேல்பெஞ்சமின், சார்பு நீதிபதி மாரீசுவரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பாஸ்கர், முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நிலவேஸ்வரன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Next Story