தேனியில், டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் சோதனை - தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

தேனியில் டாஸ்மாக் பார்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில், தேனி நகரில் உள்ள டாஸ்மாக் பார்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நவநீதன் தலைமையில், தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன், தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
தேனி ஜமீன்தார் காம்பளகஸ் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார், காட்டு பத்திரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் பார், புதிய பஸ் நிலையம், உழவர்சந்தை பகுதிகளில் உள்ள மதுபான பார்கள் என மொத்தம் 9 டாஸ்மாக் பார்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டாஸ்மாக் பார்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, கெட்டுப்போன மற்றும் தரமற்ற இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த தண்ணீர் பாட்டில்கள், காலாவதியான குளிர்பானங்கள் ஆகியவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தேனி கடற்கரை நாடார் தெருவில் உள்ள ஒரு கடையில் வைத்து இருந்த காலாவதியான தின்பண்டங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதால் 4 டாஸ்மாக் பார்கள் மற்றும் ஒரு பழக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 700 அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story






