யூனியன் கண்மாய்களை மராமத்து செய்ய நடவடிக்கை தேவை - மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை


யூனியன் கண்மாய்களை மராமத்து செய்ய நடவடிக்கை தேவை - மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2019 10:30 PM GMT (Updated: 9 Aug 2019 5:40 PM GMT)

மாவட்டம் முழுவதும் யூனியன் கண்மாய்களை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் நீர்வளத்தை மேம்படுத்த கண்மாய்களை மராமத்து செய்யும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலும் 65 பொதுப்பணித்துறை கண்மாய்களை மராமத்து செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மராமத்து பணிகள் நடந்து வருகின்றன.

கிராமப்புறங்களிலும் பாசன சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் கண்மாய் மராமத்து பணி நடந்து வருகிறது.

குடிமராமத்து பணிகள் நடக்கும் கண்மாய்களில் சில அமைப்புகளும், தனி நபர்களும் மராமத்து பணிக்கு இடையூறு செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கிராமமக்கள் புகார் கூறி வருகின்றனர். இடையூறு செய்யும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து குடிமராமத்து பணி பாதிப்பு இல்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கண்மாய்களை மராமத்து செய்ய முன்வரும் தொண்டு நிறுவனங்களையும், கிராம மக்களையும் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் ஐரோப்பிய யூனியன் நிதியுதவி கிடைத்ததால் யூனியன் கண்மாய்கள் மராமத்து செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த நிதியுதவி கிடைக்காத நிலையில் ஒவ்வொரு நிதியாண்டும், அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் குறிப்பிட்ட பொதுப்பணித்துறை கண்மாய்கள் மட்டுமே, மராமத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பல யூனியன் கண்மாய்கள் நீண்டகாலமாக மராமத்து செய்யப்படாமல் உள்ளதால், மழை பெய்தாலும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் இந்த கண்மாய்கள் உள்ளன.

தற்போதும் குடிமராமத்து பணியை மேற்கொள்ள அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியை கொண்டு, பொதுப்பணித் துறை கண்மாய்கள் மட்டுமே மராமத்து செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் பெரும்பாலான கிராமங்களில் மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் உரிய பாசன வசதி பெற முடியாத நிலை உள்ளது.

எனவே தமிழக அரசு கிராமப்புறங்களில் உள்ள யூனியன் கண்மாய்களை மராமத்து செய்ய போதிய நிதி ஒதுக்கீடு செய்வதுடன், யூனியன் கண்மாய்களை மராமத்து செய்ய முன்வரும் கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி வழங்க வேண்டும். தொடர்ந்து யூனியன் கண்மாய்கள் புறக்கணிக்கப்பட்டால், அந்த கண்மாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி பாசனத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டு விடும்.

Next Story