காசு வாங்கி ஓட்டு போடும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் - தேனியில் சீமான் பேச்சு


காசு வாங்கி ஓட்டு போடும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் - தேனியில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 10 Aug 2019 4:00 AM IST (Updated: 10 Aug 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

காசு வாங்கி ஓட்டு போடும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று தேனியில் சீமான் பேசினார்.

தேனி,

வனவேங்கைகள் கட்சி சார்பில், பழங்குடிகள் எழுச்சி மாநாடு பொதுக்கூட்டம் தேனி பங்களாமேட்டில் நேற்று நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ் சமூகத்தின் சிந்தனையில் விலங்குபோடப்பட்டுள்ளது. அதை அகற்ற தான் நாங்கள் புரட்சிகர அரசியலை கையில் எடுத்துள்ளோம். தமிழர்களிடம் தற்போது பண்பாட்டு மீட்சி, அரசியல் புரட்சி ஏற்பட்டு வருகிறது.

காளைகளை அழிப்பதற்காக அவற்றை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார்கள். இப்போது காடுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் காடுகளில் வாழும் பழங்குடியின மக்களை வெளியேற்றி வருகின்றனர். காடுகளை இத்தனை ஆண்டுகள் பாதுகாத்ததே பழங்குடி மக்கள் தான். தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது தமிழர் அடையாளம் தவிர வேறு எவர் அடையாளமும் தமிழ்நாட்டில் இருக்காது.

காசு வாங்கி ஓட்டு போடும் பழக்கத்தை இளைய தலைமுறைகள் ஒழிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கான அறம் சார்ந்த ஆட்சி அமையும். அறிவுத் தெளிவும், அரசியல் புரிதலும் கொண்டவர்களாக தமிழர்கள் உருவாக வேண்டும். விரைவில் நாம் தமிழர் அரசு அமையும். தோல்வியால் தற்சோர்வு அடைந்து விடக்கூடாது. உறுதியாக நாம் எடுத்து வைக்கும் அரசியல் வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், வன வேங்கைகள் கட்சி தலைவர் இரணியன், மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story