மோட்டார் சைக்கிள்- மினி லாரி மோதல், திருமண மண்டப மேலாளர் பலி
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் திருமண மண்டப மேலாளர் பரிதாபமாக இறந்தார். தந்தையின் படத்திறப்புக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா துறையுண்டார்கோட்டையை சேர்ந்தவர் ராமையன். இவருடைய மகன் முருகேசன் (வயது 45). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். ராமையன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.
தந்தை இறந்த 16-வது நாள் படத்திறப்பு நிகழ்ச்சியை தனது வீட்டில் நேற்று நடத்த திட்டமிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து அதற்கான அழைப்பிதழ்களை தஞ்சையில் உள்ள உறவினர்களுக்கு முருகேசன் கொடுத்து வந்தார். சம்பவத்தன்று அழைப்பிதழ் கொடுப்பதற்காக பட்டுக்கோட்டை- தஞ்சை மெயின்ரோட்டில் கீழவஸ்தாசாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகேசனை சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story