முல்லைப்பெரியாறு அணையில், கூடுதல் தண்ணீர் திறப்பால் மின் உற்பத்தி அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணையில், கூடுதல் தண்ணீர் திறப்பால் மின் உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 3:45 AM IST (Updated: 11 Aug 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது.

தேனி,

தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் காலையில் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 321 கன அடியாக இருந்தது. தொடர்ந்து மாலையில் நீர்வரத்து குறைந்தது. இரவில் நீர்மட்டம் 126 அடியை கடந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 818 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 3 ஆயிரத்து 964 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 1,200 கன அடியாக உயர்த்தப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 4 ராட்சத குழாய்கள் மூலமும், இரைச்சல் பாலம் வழியாக வனப்பகுதியில் உள்ள ஆற்றின் வழியாகவும் தமிழகத்துக்கு தண்ணீர் வருகிறது. இதில் ராட்சத குழாய்களில் தலா 400 கன அடி வீதம், 4 குழாய்களிலும் மொத்தம் 1,600 கன அடி வரை தண்ணீர் கொண்டு வர முடியும்.

இவ்வாறு குழாய்கள் வழியாக கொண்டு வரப்படும் தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் இறுதியில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வரை திறக்கப்பட்டதால், ஒரு ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கியது.

தொடர்ந்து கடந்த 8-ந்தேதி அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் மேலும் ஒரு ஜெனரேட்டர் மூலம் மின்சார உற்பத்தி தொடங்கியது. நேற்று முன்தினம் 1,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலையில் வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், 3-வது ஜெனரேட்டரும் இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.

3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு உள்ளதால் மின்சாரம் உற்பத்தி அதிகரித்து உள்ளது. ஒரு ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

அந்த வகையில் தற்போது 3 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 4-வது ராட்சத குழாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டால் மின்சாரம் உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.

Next Story