ஹெல்மெட்டின் அவசியத்தை வாகன ஓட்டிகள் உணர வேண்டும் டி.ஐ.ஜி. லோகநாதன் பேச்சு


ஹெல்மெட்டின் அவசியத்தை வாகன ஓட்டிகள் உணர வேண்டும் டி.ஐ.ஜி. லோகநாதன் பேச்சு
x
தினத்தந்தி 11 Aug 2019 4:15 AM IST (Updated: 11 Aug 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஹெல்மெட்டின் அவசியத்தை வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என்று, கும்பகோணத்தில் டி.ஐ.ஜி.லோகநாதன் கூறினார்.

கும்பகோணம்,

கும்பகோணம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் போலீஸ் துறை சார்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் கலந்து கொண்டு சிறந்த முறையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாட்ஸ்- அப்

தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. தற்போது அனைவரிடமும் செல்போன் உள்ளது. எனவே பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் வகையிலும் குற்றங்களை தடுக்கவும் பொதுமக்கள்- போலீசார் இணைந்த வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.

விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள் இந்த வாட்ஸ்- அப் குழுவில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெற முடியும்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 70 சதவீதம் உறவினர்களே குற்றவாளிகளாக உள்ளனர். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலை விதிகளை கடைபிடித்தால் பெருமளவு விபத்துகளை தவிர்க்க முடியும். ஹெல்மெட்டின் அவசியத்தை இரு சக்கர வாகன ஓட்டிகள் உணர வேண்டும்.

95 சதவீத உயிரிழப்புகள் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதால் நிகழ்கின்றன. எனவே மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

ஆதரவற்ற முதியவர்களுக்கு உரிமைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளது. பெற்ற பிள்ளைகளால் கைவிடப்படும் முதியவர்கள் இந்த சட்டத்தின் கீழ் புகார் தெரிவிக்கும் போது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எழுதிகொடுத்த சொத்துக்களை ரத்து செய்து மீண்டும் பெற்றோர் தங்கள் சொத்துக்களை வசப்படுத்தி கொள்ள அரசியலமைப்பில் சட்டங்கள் உள்ளன. இதுகுறித்து முதியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் 9498100848 என்ற செல்போன் எண்ணில் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். கிராம கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுகா, பட்டீஸ்வரம், சுவாமிமலை போலீஸ் சரகத்தில் வசிக்கும் மக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். முடிவில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் நன்றி கூறினார். 

Next Story