தர்மபுரியில் இளையோருக்கான தடகள போட்டிகள் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு


தர்மபுரியில் இளையோருக்கான தடகள போட்டிகள் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 4:00 AM IST (Updated: 11 Aug 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நடந்த இளையோருக்கான தடகள போட்டிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தடகள விளையாட்டு கழகத்தின் சார்பில் மாவட்ட அளவில் இளையோருக்கான தடகள விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலாஜோன் சுசீலா தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக தட களபோட்டிகள் நடத்தப்பட்டது. 16 வயதிற்குட்பட்டோர், 18-வயதிற்குட்பட்டோர் மற்றும் 20 வயதிற்குட்பட்டோர் என 3 பிரிவுகளாக 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், தடகள விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறனை வெளிப்படுத்தினார்கள்.

இந்த போட்டிகளின் முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு இந்த விழாவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட தடகள விளையாட்டு கழக தலைவர் நடராஜன், துணைத்தலைவர் ஜெ.பி.நாகராஜன், செயலாளர் அறிவு, பொருளாளர் குமார் மற்றும் நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தடகள போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் வீரர்-வீராங்கனைகள் வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி வரை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

Next Story