நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. தீணை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சியில் நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரி மூலம் நெல்லையை அடுத்த ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தனித்தனியாக பிரித்து கொட்டப்படுகிறது.
குப்பை கிடங்களில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. சுமார் 50 குழிகள் தோண்டப்பட்டு குப்பைகள் மக்க வைக்கப்படுகின்றன. அதில் இருந்து இயற்கை உரம் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குப்பை கிடங்கில் நேற்று சுமார் 3 மணி திடீரென்று தீப்பிடித்தது. தீ மள, என என பற்றி எரிந்தது. தகவல் அறிந்த நெல்லை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சென்றனர். பாளையங்கோட்டை நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்கள் சென்றன. இது தவிர பேட்டை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு,, தீயணைக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படியிருந்தும் தீ கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.
குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்து வருவதால் கரும்புகை கிளம்பியுள்ளது. சுற்று வட்டார பகுதியில் புகை பரவி வருகிறது. மேலும் இந்த புகை தச்சநல்லூர், மானூர் வரை பரவி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story