வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு


வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 3:15 AM IST (Updated: 11 Aug 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்தையாபுரம் மகாநகரை சேர்ந்தவர் சுப்பையா மகள் தனலட்சுமி (வயது 33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றும் சஞ்சய் என்பவருக்கும் கடந்த 2.11.2011 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 சென்ட் இடம் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சஞ்சய், அவருடைய தாயார் கீதாலட்சுமி ஆகியோர் தனலட்சுமியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனலட்சுமி கடந்த 16.3.2013 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக சஞ்சய், கீதாலட்சுமி ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டியதாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீதாலட்சுமி உயிர் இழந்தார்.

இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குமார்சரவணன் விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் வக்கீல் சுபாஷினி ஆஜரானார்.

Next Story