குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க பொதுமக்கள் கோரிக்கை


குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2019 4:15 AM IST (Updated: 11 Aug 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

க.பரமத்தி,

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். அமராவதி ஆறு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், தாராபுரம், புதுப்பை, கரூர் மாவட்டம் வடகரை, ஒத்தமாந்துறை, ராஜபுரம், அணைப்பாளையம், கரூர் வழியாக திருமக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 227 கிலோமீட்டர் ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் ஆறு மற்றும் ஆற்றிலிருந்து 18 வாய்க்கால்கள் மூலம் பிரிக்கப்பட்டு திருப்பூர், கரூர் மாவட்டத்தில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் இதில் 10-க்கும் மேற்பட்ட தடுப்பு அணைகள் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், சோளம், வாழை போன்ற பயிர்கள் பயிரிடப்படுகிறது. இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவ மழை

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான துவானம், பாம்பாறு, தேனாறு, சின்னாறு, ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் மள மளவென உயர்ந்து வருகிறது. கடந்த 8-ந்தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 48.07 ஆக இருந்தது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 22.24 அடி உயர்ந்து 70.31 அடியானது. நேற்று மாலை 5 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 548 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தண்ணீர் திறக்கப்படுமா?

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடந்தூர், கூடலூர் மேற்கு, கூடலூர் கிழக்கு, சின்னதாராபுரம், தொக்குபட்டி, எலவனூர், ராஜபுரம், புஞ்சைகாளிகுறிச்சி, நஞ்சைக்காளிகுறிச்சி, அணைப்பாளையம், தும்பிவாடி, விசுவநாதபுரி ஆகிய ஊராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி, தாந்தோனி, கரூர் ஒன்றியங்களில் தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும், காலி குடங்களுடன் மறியல் செய்தும் வருகின்றனர். எனவே கரூர் மாவட்ட தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எதிர்பார்ப்பை அரசும், அதிகாரிகளும் நிறைவேற்றுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story