விழுப்புரத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


விழுப்புரத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 3:46 AM IST (Updated: 11 Aug 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகர் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. திடீரென அடுத்த சில நிமிடத்தில் அந்த கார் தீப்பிடித்து எரிந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகர் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் எதிரே நேற்று மாலை 4.45 மணியளவில் கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரில் இருந்து கீழே இறங்கிய 2 பேர், டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு வந்தனர். அப்போது திடீரென காரின் பின்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. அடுத்த சில நிமிடத்தில் அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசவே தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதை பார்த்ததும் காரில் வந்த இருவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள், விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த கார், முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார், பண்ருட்டியை சேர்ந்த தனபால் என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்தது. விழுப்புரத்தில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story