சம்பா சாகுபடிக்கு தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி


சம்பா சாகுபடிக்கு தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2019 4:30 AM IST (Updated: 12 Aug 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

சம்பா சாகுபடிக்கு தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் சொரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பெரியகுளத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் குளம் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். தூர்வாரும் பணியை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இந்தாண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது.

இத்திட்டமானது தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 1,942 குளங்கள் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. தூர்வாரும் திட்டத்தின்கீழ் தலா ஒரு குளத்திற்கு ரூ.1 லட்சம் மண் எடுப்பதற்கும், ரூ.2 லட்சம் கரைகள் சீரமைப்பு பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மழைநீரை சேமிப்பது ஒவ்வொருக்கும் தலையாய கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நீர் சேமிப்பு நாளைய சந்ததியினருக்கு நாம் செய்யும் நன்மை. எனவே தமிழக அரசு மேற்கொள்ளும் நீர் மேலாண்மை பணிகளுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, முன்னாள் எம்.பி. டாக்டர் கே.கோபால், செயற்பொறியாளர் குமார், நன்னிலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணை நிரம்பினாலும் சம்பா சாகுபடிக்கு தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும். உணவு பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு சலுகைகளை பெற்று நடைமுறைப்படுத்தி வரும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. இனி நடைபெறும் தேர்தல்களில் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story