கிருமாம்பாக்கம் அருகே கியாஸ் சிலிண்டர்களுடன் சென்ற லாரி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது


கிருமாம்பாக்கம் அருகே கியாஸ் சிலிண்டர்களுடன் சென்ற லாரி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 12 Aug 2019 4:15 AM IST (Updated: 12 Aug 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி கிருமாம்பாக்கம் அருகே சாலை தடுப்பில் மோதி ரோட்டில் கவிழ்ந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிலிண்டர்களை மீட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.

பாகூர்,

சென்னை கும்மிடிப்பூண்டியில் இருந்து சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்துக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கும்மிடிப்பூண்டி சேர்ந்த டிரைவர் முத்து (வயது 33) ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை அந்த லாரி கிருமாம்பாக்கம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் முத்து அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினார். லாரி கவிழ்ந்ததில் அதில் ஏற்றப்பட்டிருந்த சிலிண்டர்கள் ரோட்டில் உருண்டு ஓடின. அதில் இருந்து கியாஸ் கசிவு ஏற்படாததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த வழியாக நடைபெற்ற போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு சாலையில் சிதறிக் கிடந்த சமையல் கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினார்கள். மேலும் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியும் மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் அந்த சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story