திருச்சுழி அருகே, விஷம் தின்ற 18 ஆடுகள் பலி


திருச்சுழி அருகே, விஷம் தின்ற 18 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 12 Aug 2019 4:15 AM IST (Updated: 12 Aug 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே விஷம் தின்ற 18 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுதொடர்பாக விவசாயி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சுழி,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அன்னலெட்சுமி புரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். விவசாயமே பிரதான தொழிலாக உள்ள இந்த பகுதியில் தற்போது பெரும்பாலானோர் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை அவரது உறவினர் ராமு மேய்ச்சலுக்காக கண்மாய் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்.

அதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது வயலில் ஆடுகள் மேயச்சென்றுள்ளன. சிறிது நேரத்தில் ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி கீழே விழுந்து துடிதுடித்தன. அதைதொடர்ந்து 18 ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக பரிதாபமாக உயிரிழந்தன.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வீரசோழன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், விவசாயி பொன்னுச்சாமி தனது வயலில் வேலியில் நட்டு வைத்திருந்த வேப்பங்கன்றுகளை ஆடு, மாடுகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு மரக்கன்றை சுற்றிலும் விஷ மருந்தை வைத்திருந்ததும், அதனை தின்ற ஆடுகள் உயிர் இழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பொன்னுச்சாமி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


Next Story