வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி தீவிரம்


வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி தீவிரம்
x
தினத்தந்தி 13 Aug 2019 4:15 AM IST (Updated: 13 Aug 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேதாரண்யம்,

தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் 2-வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஜனவரியில் தொடங்கிய உப்பு உற்பத்தி கடும் வெயிலின் காரணமாக அதிகளவில் நடைபெற்று வந்தது.அப்போது வேதாரண்யம் பகுதியில் கடந்த மாதம் 27-ந் தேதி மழை பெய்ததால் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இருப்பு வைத்திருந்த உப்பு மழையில் கரைந்து சேதம் அடையாமல் இருக்க பிளாஸ்டிக் தார்பாய் மற்றும் பனை ஓலை மட்டைகளை கொண்டு மூடி பாதுகாத்து வந்தனர்.

உப்பு உற்பத்தி தீவிரம்

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு தற்போது வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது் 50 ஆயிரம் டன் உப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தீவிரமாக உப்பு உற்பத்தி நடைபெறுவதால் ஆண்டு தோறும் உற்பத்தி இலக்கான 6 லட்சம் டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு டன் உப்பு ரூ.700-க்கு விற்பனையாகிறது. உப்பளங்களுக்கு வேலைக்கு ஆட்கள் செல்வதால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- வேதாரண்யத்தில் தற்போது அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கோடியக்காடு ஆகிய பகுதிகளின் 9 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் உற்பத்தி நடைபெறும். இதில் அகஸ்தியன்பள்ளியில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 3,300 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்து வந்தனர்.

நிவாரணம்

கடந்த ஆண்டு கஜா புயலால் உப்பளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட உப்பளங்களுக்கு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு உப்பு உற்பத்தியின் பரப்பளவு சரிபாதியாக குறைந்து உள்ளது. உப்பு விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story