மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை + "||" + Muslims perform special prayers during the festival of Bhakreit

பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சியில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். மேலும் குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.
திருச்சி,

முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று திருச்சி கண்டோன்மெண்ட் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. மவுலவி அப்துர்ரகுமான் தொழுகையை நடத்தினார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர்மொய்தீன், ஆற்காடு எண்டோன்மெண்ட் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி பஷீர் அகமது என்கிற நவுசாத், மக்கள் தொடர்பு அதிகாரி முகமது அப்துர் ரசாக் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்த தொழுகையில் சிறுவர், சிறுமிகளும் பங்கேற்றனர். அவர்களும் வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் தெரிவித்தனர்.


திருச்சி பாலக்கரையில் சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் த.மு.மு.க. சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக தொழுகை நடந்தது. தொழுகையில் மாநில பொருளாளர் ஷபியுல்லா, மாவட்ட தலைவர் ஜாபர்அலி, மாவட்ட செயலாளர்கள் இப்ராகிம், அஷ்ரப் உள்பட முஸ்லிம்கள் பலர் பங்கேற்றனர்.

குர்பானி

பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர். பக்ரீத் பண்டிகையில் ஏழை, எளிய மக் களுக்கு நல உதவிகள் வழங்குதல் மற்றும் ஆடுகளை வெட்டி அதன் இறைச்சியை குர்பானியாக கொடுப்பது வழக்கம். அதன்படி பண்டிகையையொட்டி ஆடுகளை வெட்டி இறைச்சியை ஏழை, எளியவர்களுக்கும், தங்களது உறவினர்களுக்கும் கொடுத்து முஸ்லிம்கள் மகிழ்ந்தனர். மேலும் வீடுகளில் பிரியாணி உணவு சமைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கினர். பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் பலர் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

மணப்பாறை

இதேபோல மணப்பாறையில் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளிவாசல் இமாம் காதர்உசேன் பக்ரீத் பண்டிகை குறித்தும், தியாகம் குறித்தும் விளக்கி கூறினார். அதன்பின் ஹஜ்ரத் சிராஜ்தீன் சிறப்பு தொழுகையை நடத்தினார். அதைத்தொடர்ந்து மழைவேண்டியும், விவசாயம் செழித்திடவும் சிறப்பு துஆ ஓதப்பட்டது. இந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோல முகம்மதியா பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையை பள்ளிவாசல் இமாம் ரஹ்மத்துல்லா நடத்தி வைத்தார். மாகாளிப்பட்டி, வையம்பட்டி, இளங்காகுறிச்சி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு உள்பட பல்வேறு இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.