பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 12 Aug 2019 10:27 PM GMT (Updated: 12 Aug 2019 10:27 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள பள்ளி வாசல்களில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது.

சேலம்,

முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் நேற்று காலை பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. மசூதிகள், பள்ளிவாசல்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

சேலத்தில் புத்தாடை அணிந்து ஏராளமான முஸ்லிம்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிவாசல் இல்லாத இடங்களில் மைதானம் மற்றும் சமுதாய கூடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

சேலம் டவுனில் உள்ள ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தங்களது வீடுகளுக்கு சென்று வசதிக்கு ஏற்ப அக்கம் பக்கத்தில் வசிக்கும் நண்பர்களுக்கும், ஏழை, எளியோருக்கும் குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர். சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, கொண்ட லாம்பட்டி, கன்னங்குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சூரமங்கலம் தர்மா நகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று காலை பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், சிறுவர், சிறுமிகள் புத்தாடைகளை அணிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

சேலம் முகமது புறா பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் சிலர் ஏழை, ஏளிய மக்களுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் முகமது புறா பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதவிர, கேரளா, கர்நாடக மாநிலங் களிலும், நீலகிரி, கோவை மாவட்டத்திலும் மழை வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து அப்பகுதி மக்கள் மீண்டு வர சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


Next Story