சுதந்திர தினவிழாவில் பணியின் போது போலீசார் செல்போன் பயன்படுத்த கூடாது - சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


சுதந்திர தினவிழாவில் பணியின் போது போலீசார் செல்போன் பயன்படுத்த கூடாது - சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:10 PM GMT (Updated: 12 Aug 2019 11:10 PM GMT)

சுதந்திர தினவிழாவில் போலீசார் பணியில் இருக்கும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி போலீசார், மாணவ, மாணவிகள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. போலீசாரும் இரவு பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் உப்பளம் மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

இந்தநிலையில் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நேற்று ஆய்வு செய்தார். அப்போது போலீசாருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

குறிப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும். பணியின்போது செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. மிக முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும். அதேநேரத்தில் விழாவினை காணவரும் பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

வாகனங்களை அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்த ஆவன செய்யவேண்டும். விழாவிற்கு வரும்போதும், செல்லும்போதும் வாகன நெரிசல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், ஜிந்தா கோதண்டராமன், மோகன்குமார், முருகவேலு, பாலகிருஷ்ணன், ரங்கநாதன், ராஜசங்கர் வல்லாட், சுப்ரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story