சிதம்பரம் பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

சிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், அமுதா, பரணிதரன், தனசேகரன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சிதம்பரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் தனிப்படை போலீசார் சம்பவத்தன்று அண்ணாமலை நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், அண்ணாமலை நகரை சேர்ந்த முத்துசாமி மகன் சுரேந்தர் (வயது 35), வல்லம்படுகை பெராம்பட்டை சேர்ந்த ரங்கநாதன் மகன் சுபாஷ்(44), பாலகிருஷ்ணன் மகன் முருகன் என்கிற முக்கூட்டு முருகன்(43), அருள்செல்வன் மகன் ஆனந்தன்(38) என்பதும், இதில் சுரேந்தர், சுபாஷ் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த நந்திமங்கலத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் வினோத்குமாரை(28) தாக்கி ஒரு பவுன் நகையை பறித்து சென்றதும், முருகன், ஆனந்தன் ஆகியோர் அண்ணாமலை நகரை சேர்ந்த பார்த்திபன்(21) என்பவரை தாக்கி ரூ.6 ஆயிரத்தை பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தர், சுபாஷ், முருகன், ஆனந்தன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகை, ரூ.6 ஆயிரம் மீட்கப்பட்டது.
கைதான 4 பேர் மீதும் அண்ணாமலை நகர் மற்றும் சிதம்பரம் போலீஸ் நிலையங்களில் கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story