‘வெற்றி நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது’ பா.ம.க. பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


‘வெற்றி நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது’ பா.ம.க. பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 11:31 PM GMT)

வெற்றி நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்று திண்டிவனத்தில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

திண்டிவனம்,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 80-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் முத்துவிழா பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் சிவக்குமார், மாநில துணை தலைவர்கள் ஏழுமலை, சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுப்பராயலு , சிவக்குமார், மலர் சேகர், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் தர்மன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர் பாதிரி கோவிந்தசாமி, மாநில துணை தலைவர் கருணாநிதி ஆகியோர் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். மாவட்ட தலைவர் ரத்தினம் வரவேற்றார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் தீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

ஜப்பானில் 100 முதல் 150 வயது வரைக்கும் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு வாழும் மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் அவர்களை வாழ வைக்கிறது. அதேபோன்று இங்குள்ள தமிழக மக்கள் வாழ உடல், மனம் கட்டுப்பாடுகள் தேவை. மனசோர்வு நீங்கி, வறுமை, கடனின்றி வாழ வேண்டும். செல்போன் பயன்படுத்தாமல் இருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும். 21 ஆண்டுகள் வனவாசம் என்று கூறினார் பேராசிரியர் தீரன். ஆனால் அவர் என்றும் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் தொடங்கிய சங்கம் இது. கட்சிக்கு அவர் வந்திருப்பது என்னை விட அவருக்கே மிக்க மகிழ்ச்சியான ஒன்றாகும். ஒரு கோடி தொண்டர்கள் இருப்பதற்கு பேராசிரியர் தீரனின் உழைப்பே காரணமாகும். தொண்டர்களை மதிக்கும் கட்சி இதுவாகும். ஒரு தேர்தலை வைத்து எதையும் சொல்ல முடி யாது. வெற்றி நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது. மக்கள் நம்மை எதிர்பார்க்கிறார்கள். நம்மிடம் உள்ள கொள்கை நாட்டில் வேறு எந்த கட்சியிலும் இல்லை. நமது கொள்கை வலுவானது. எனவே நமது கொள்கைகள் வெற்றி பெறும். இதுவரை கூறி வரும் வாக்குறுதிகள் அனைத்தையும், நாம் மக்களுக்கு நிறைவேற்றி தர வேண்டும். வருகிற செப்டம்பர் 17-ந்தேதி தியாகிகள் தினம். அன்றைய தினம் குருவின் மணிமண்டப பணிகள் முடிந்து திறக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வக்கீல் பாலாஜி, ஜானகிராமன், பிரபு, இளங்கோ, வட பழனி, ஜெயராஜ், சரவணன், செந்தில், சவுந்தர், சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஒலக்கூர் கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணி, வானூர் கணேசன், ராஜ்குமார், மகாலிங்கம், கண்டமங்கலம் சிவசங்கரன், ரமேஷ், மரக்காணம் பலராமன், வெங்கட், கோட்டகுப்பம் அஷ்ரப் அலி, சக்திவேல், திருச்சிற்றம்பலம் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திண்டிவனம் நகர செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Next Story