கூடலூர் பகுதியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல்
கூடலூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர், நிவாரண பொருட்களை வழங்கினார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் கூடலூர் பகுதியில் நிலச்சரிவுகள், சாலைகள் துண்டிப்பு, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக அவர், ஊட்டியில் இருந்து பகல் 11 மணிக்கு கூடலூர் வந்தார். பின்னர்அவர், பந்தலூர் பகுதியில் எலியாஸ் கடை பிரிவு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
மேலும் தேயிலை தோட்டம் நிலச்சரிவில் சேதம் அடைந்துள்ளதை பார்வையிட்டார். பின்னர் சேரங்கோடு முகாமில் தங்கி இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, பருப்பு, துணிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதேபோல் சேரம்பாடி, அய்யன்கொல்லி, அம்பலமூலா உள்ளிட்ட முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் வெள்ளம் பாதித்த இடங்களை முழுமையாக பார்வையிட்ட பின் ஊட்டியில் சந்திப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாலை 5½ மணிக்கு கூடலூர் வழியாக மீண்டும் ஊட்டிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு சென்றார். அப்போது கூடலூர் நகராட்சி பகுதியில் ஓவேலி பேரூராட்சியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் துணை முதல்-அமைச்சர் காரை வழிமறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை கண்ட ஓ.பன்னீர்செல்வம் காரை நிறுத்தி விசாரித்தார். அப்போது ஓவேலி பகுதியில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ளனர். அவர்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முகாமுக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.
அப்போது அவரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, ஓவேலி பகுதியில் வசிக்கும் எங்களின் வீடுகள் முழுமையாக இடிந்து விட்டது. புதியதாக கட்டுமான பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் புதிய வீடுகள் கட்ட முடியாத நிலை உள்ளது என்றனர்.
இதைக்கேட்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்- அமைச்சர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வருகிறேன். உங்களுக்கு என்னென்ன தேவையோ முழுமையாக செய்து தரப்படும். மேலும் ஓவேலி பகுதியில் உள்ள பிரச்சினைகளை அறிவேன். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் உறுதி அளித்தார். இதனால் அவருக்கு ஓவேலி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
அப்போது கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கண்காணிப்பு அதிகாரி சந்திரகாந்த் காம்ளே, அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ், தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார், முன்னாள் அமைச்சர்கள் புத்திசந்திரன், அ.மில்லர், முன்னாள் எம்.பிக்கள் கே.ஆர்.அர்ஜூணன், தியாகராஜன், சாந்திராமு எம்.எல்.ஏ., கூடலூர் நகர செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் பத்மநாதன் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலை 10 மணிக்கு ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகளுடன் வெள்ள நிவாரணை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள், பாலங்கள், கால்வாய்கள் மற்றும் சிறிய பாலங்களை சரிசெய்ய ரூ.100 கோடி நிதி தேவைப்படுவதாக தெரிவித்தனர். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்கள் குறித்த கணக்கெடுப்பு வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறையினர் எடுத்து வருகின்றனர் என்று கூறினர். ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஊராட்சி சாலைகள், பள்ளி உள்ளிட்ட கட்டிடங்கள் பாதிப்பு, நடைபாதை துண்டிப்பு, மின் இணைப்பு, குடிநீர் வினியோகம் போன்றவற்றுக்கு ரூ.39 கோடி நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளம் பாதிப்பு தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய விவரங்களை பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரியில் அளவுக்கு அதிகமாக மழை பெய்துள்ளதால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகளை மாவட்ட அதிகாரிகள், அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். வெள்ளத்தால் சேதம் அடைந்த விளைநிலங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்திய வானிலை மையம் முன்கூட்டியே கூறியதால் நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வரு கிறது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறி அரசியல் செய்து வருகிறார். நீலகிரியில் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story