வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண்குழந்தை பிணமாக மீட்பு
ஆனைமலையை அடுத்த சர்க்கார்பதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது.
ஆனைமலை,
ஆனைமலை வட்டாரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வரை பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. இதில் ஆனைமலையை அடுத்த சர்க்கார்பதி பகுதியில் கடந்த 8-ந் தேதி அதிகபட்சமாக 260 மி.மீட்டர் மழை பெய்தது. இந்த மழையின்போது சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தை ஒட்டிய மலைகளில் இருந்து மரங்களும், கற்களும் அடித்து வரப்பட்டு, மண் சரிவும் ஏற்பட்டது.இதில் அங்குள்ள மின் உற்பத்தி நிலையத்தை ஒட்டிய மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன.
அப்போது அங்கிருந்த மலைவாழ் மக்கள் பதறியடித்து வீடுகளில் இருந்து தப்பி அருகே இருந்த மின்வாரிய குடியிருப்பில் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர். ஆனால் அங்கு வசித்து வரும் குஞ்சப்பன் என்பவரது மகளான 2½ வயது குழந்தை சுந்தரியை வெள்ளம் அடித்துச்சென்றது. இரவு நேரமானதால், வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மலைவாழ் மக்கள் நீண்ட நேரம் போராடியும் மீட்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர், மின்வாரிய துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் சேர்ந்து மறுநாள் அதிகாலையில் இருந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் தேடும் பணி தொடர்ந்தது.
இந்த நிலையில் சர்க்கார்பதியில் இருந்து சுமார் 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆழியாறு ஊட்டுக்கால்வாயின் கிளை கால்வாய் ஒன்றில் நேற்று தண்ணீர் வற்றிய போது அழுகிய நிலையில் குழந்தையின் பிணம் ஒன்று கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அறிந்ததும் ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம், மண்டல துணை தாசில்தார் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் கருப்பையா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு நடத்திய ஆய்வில் இறந்து கிடந்தது குழந்தை சுந்தரி என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டரை வயது குழந்தை 5 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குழந்தையின் உடலை பார்த்து அவரது பெற்றோரும், மலைவாழ் மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
Related Tags :
Next Story