ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான சுற்றறிக்கைகளை இந்தியில் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டதால் திடீர் சர்ச்சை; தமிழகத்தை சேர்ந்தவர்கள் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு


ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான சுற்றறிக்கைகளை இந்தியில் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டதால் திடீர் சர்ச்சை; தமிழகத்தை சேர்ந்தவர்கள் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:45 PM GMT (Updated: 13 Aug 2019 8:41 PM GMT)

ரெயில் பயணிகளுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு படை போலீசாருக்கான சுற்றறிக்கைகள் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும் என்று உத்தரவிட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது. சுற்றறிக்கைகளை தமிழகத்தை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மதுரை,

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதே நேரத்தில் தென்னக ரெயில்வேயில் ரெயில்வே பணித்தேர்வுகளை இந்தி, ஆங்கில மொழியில் நடத்துவது, ரெயில்வே துறையில் தொழில் பழகுனர் பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழில் நடத்தப்படும் தேர்வுகளை ஆங்கிலத்தில் நடத்தியது, ரெயில்வே அலுவலர்கள், பணியாளர்கள் அலுவலக நடைமுறை கடிதங்கள் மற்றும் அறிக்கைகளை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டும் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது சர்ச்சையை கிளப்பியது.

இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த பிரச்சினையின் தீவிரம் அடங்குவதற்குள், தற்போது மற்றொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. அதாவது, ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு, ரெயில்வே சொத்துகளை பாதுகாப்பது ஆகிய பணிகளில் ரெயில்வே பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இதுதவிர தேர்தல், கலவரம் தடுப்பு பணியிலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், இதற்கு துணை ராணுவ அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசின் சுற்றறிக்கை இனிமேல் இந்தி மொழியில் மட்டும் அனுப்பி வைக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, இனிமேல் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் அறிவுரைகள், உத்தரவுகள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும்.

தமிழகத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையில் தமிழர்களே அதிக அளவு பணியாற்றி வருகின்றனர். அங்கும் கடைநிலை போலீசாரில் இருந்து பல்வேறு உயர்பதவிகளில் தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். ரெயில் நிலையங்கள், ரெயில்களில் பாதுகாப்பு பணிக்கு பெரும்பாலும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு இந்தி மொழி தெரிவதற்கு வாய்ப்பில்லை. எனவே, இந்தி மொழி தெரிந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுற்றறிக்கைகளை தமிழில் மொழி பெயர்த்து அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்புடைய சுற்றறிக்கைகளை மொழி பெயர்க்கும் போது, புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படவும், பயணிகளின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே சுற்றறிக்கைகளை தமிழிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Next Story