மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்த 8 மாணவர்களுக்கு நூதன தண்டனை; காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்ய நீதிபதி உத்தரவு


மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்த 8 மாணவர்களுக்கு நூதன தண்டனை; காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்ய நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:15 PM GMT (Updated: 13 Aug 2019 8:50 PM GMT)

மது போதையில் வகுப்புக்கு வந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு, மதுரை ஐகோர்ட்டு நீதிபதி புதுமையான தண்டனை அளித்தார். காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்வதுடன் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள கலை கல்லூரியில் பி.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 8 பேர் மது குடித்துவிட்டு போதையில் வகுப்புக்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த 8 மாணவர்களை வகுப்புக்குள் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து தங்களிடம் கல்வி கட்டணத்தை பெற்றுக்கொண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி 8 மாணவர்களும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மாணவர்களின் இந்த நடவடிக்கை மன்னிக்க முடியாத குற்றமாகும். அதே நேரத்தில் அவர்களை வகுப்பில் இருந்து வெளியே அனுப்பினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனுதாரர்கள் தங்களின் தவறை ஏற்கனவே உணர்ந்துள்ளனர். கோர்ட்டில் ஆஜராகி கல்லூரியில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். இதனால் மனுதாரர்கள் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். காமராஜர் இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

விழிப்புணர்வு வாசகங்கள்

* மதுவை மறந்து விடு- மனிதனாய் வாழ்ந்து விடு

* மது அருந்தாதே-மரியாதை இழக்காதே

* குடியை மறந்து விடு-குடும்பத்தை வாழவிடு

* குடிப்பதை நிறுத்திவிட்டு, குடிப்பவன் நட்பை ஒதுக்கிவிடு.

-என்று தமிழில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, காமராஜர் இல்லத்துக்கு வெளியே மாலை 4 முதல் 6 மணி வரை பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

கோர்ட்டு உத்தரவுப்படி மனுதாரர்கள் நடந்து கொள்கிறார்களா? என்பதை உதவிப் பேராசிரியர் ஒருவர் மூலம் கல்லூரி முதல்வர் கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் செயல்பாடு குறித்து கல்லூரி முதல்வரிடம் அறிக்கையை உதவி பேராசிரியர் அளிக்க வேண்டும்.

அந்த அறிக்கையை பெற்றதும் மனுதாரர்களிடம் உரிய கல்விக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு 3-ம் ஆண்டு வகுப்பில் கல்லூரி முதல்வர் அனுமதிக்க வேண்டும். மனுதாரர்களின் செயல்பாட்டை விருதுநகர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்காணித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை நிறைவேற்ற தவறினால் மனுதாரர்கள் மீது கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவை செயல்படுத்த கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள், கல்லூரி முதல்வர் வருகிற 19-ந் தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story