குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் விழுந்து வாலிபர் பலி - 2 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு


குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் விழுந்து வாலிபர் பலி - 2 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:15 PM GMT (Updated: 13 Aug 2019 8:53 PM GMT)

குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் விழுந்து ஒரு வாலிபர் பலியானார். அவரது உடல் 2 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

தென்காசி,

மதுரை ஆரப்பாளையத்தை அடுத்த களத்து பொட்டல், பர்மா காலனி புதுவயல் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சூரியநாராயணன் (வயது 20). இவர் இங்குள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 10-ம் தேதி இவர் தனது நண்பர்களுடன் குற்றாலம் அருவிகளில் குளிக்க வந்தார். அன்று இரவு 10 மணிக்கு அவர்கள் அனைவரும் மெயின் அருவியில் குளித்தனர்.

குளித்துவிட்டு அனைவரும் வெளியில் வந்தபோது சூரிய நாராயணனை மட்டும் காணவில்லை. பல இடங்களில் அவரை நண்பர்கள் வெகுநேரம் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியாததால், நண்பர்கள் இதுபற்றி குற்றாலம் போலீசில் தகவல் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 2 நாட் களுக்கு பிறகு நேற்று அதிகாலை 2 மணிக்கு மெயின் அருவி தடாகத்தில் சூரியநாராயணன் பிணமாக மிதந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இதுகுறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சூரியநாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story