மாவட்ட செய்திகள்

ஒரு மாணவன் மட்டும் படிக்கும் தொடக்கப்பள்ளியை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு + "||" + Public protest against closure of primary school where only one student is studying

ஒரு மாணவன் மட்டும் படிக்கும் தொடக்கப்பள்ளியை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஒரு மாணவன் மட்டும் படிக்கும் தொடக்கப்பள்ளியை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
அவினாசி அருகே நாதம்பாளையத்தில் உள்ள தொடக்கப் பள்ளியை மூடக்கூடாது என கிராம மக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி நாதம்பாளையத்தில் 1960 -ம் ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டடத்தில் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். இந்த நிலையில் 2017 -ம் ஆண்டு இந்த பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து நான்கு மாணவ-மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் 2018 -19 -ம் ஆண்டு ரோகித் என்ற ஒரு மாணவன் மட்டும் 1-ம் வகுப்பில் சேர்ந்து படித்து வந்துள்ளான். பள்ளியில் ஒரே மாணவன் என்பதால் ஒரு ஆசிரியர் மாறுதல் செய்யப்பட்டு தற்போது ஒரு தலைமையாசிரியருடன் மட்டும் இந்தப் பள்ளி செயல்பட்டு வந்தது. பள்ளியில் மாணவர் மாணவியர் சேர்க்கை அதிகம் இல்லாததால் இப்பள்ளியை மூடிவிட்டு, நூலகமாக மாற்ற அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 10 -ந் தேதி நூலகமாக மாற்றுவதற்காக இப்பள்ளிக்கு புத்தகங்கள் கொண்டுவரப்பட்டன. இதை அறிந்தஊர் பொதுமக்கள் திரண்டு வந்து தொடர்ந்து பள்ளியாகத்தான் செயல் படுத்த வேண்டும். இதை நூலகமாக மாற்றக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


இதுகுறித்து நாதம்பாளையத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கூறியதாவது:-

1954 -ம் ஆண்டு முதல் 1959 -ம் ஆண்டு வரை இங்குள்ள மாரியம்மன் கோவிலில் திண்ணை பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்தது. இதையடுத்து 1960-ம் ஆண்டு கோவில் எதிரே புதிதாக பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பள்ளியை மூட அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிகிறது. இதில் கிராம மக்களுக்கு உடன்பாடில்லை. இப்பள்ளிக்கு மாணவ-மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த கிராம மக்களாகிய நாங்கள் அனைவரும் முயற்சி மேற்கொள்கிறோம். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். எனவே இப்பள்ளியை நூலகமாக மாற்றுவதை தவிர்த்து தொடர்ந்து தொடக்கப் பள்ளியாக செயல்பட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.