மடத்துக்குளத்தில் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவ-மாணவிகள் சாலை மறியல்


மடத்துக்குளத்தில் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 7:11 PM GMT)

இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மடத்துக்குளத்தில் முன்னாள் மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2018-ம் ஆண்டு் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய அரசின் இலவச மடிக்கணினியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு உடுமலை- பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மடிக்கணினி உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறிய நாளில் முன்னாள் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் மாணவ-மாணவிகள் நேற்று மடத்துக்குளத்தில் திரண்டனர். பின்னர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் பழனி- உடுமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த முன்னாள் மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story