கம்பம் அருகே, ரூ.40 லட்சத்தில் கண்மாய் தூர்வாரும் பணி - கலெக்டர் ஆய்வு
கம்பம் அருகே ரூ.40 லட்சத்தில் நடைபெறுகிற கண்மாய் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கம்பம்,
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் இருந்து சுருளி அருவி செல்லும் சாலையில் கேசவபுரம் கண்மாய் உள்ளது. இது, 33 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த கண்மாய் மூலம் 104 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி, சுருளிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு இந்த கண்மாய் காரணமாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கூத்தநாச்சி ஓடை மூலம் கேசவபுரம் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது.
பொதுப்பணித்துறை மஞ்ச ளாறு வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் 20 ஏக்கர் நிலத்தில் புளி, இலவம், மாமரங்களை சிலர் வளர்த்து வருகின்றனர்.
கண்மாய் கரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் முன்வரவில்லை என்பது அப்பகுதி விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்க முடியாமல் நிலை இருந்தது.
இந்தநிலையில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் கண்மாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி கரையை பலப்படுத்துதல், 2 மதகுகளில் கட்டுமான பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட குடிமராமத்து பணிகள் கேசவபுரம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலம் நடைபெறுகிறது.
இந்த பணியை தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார். பின்னர் திட்டப் பணிகள் குறித்து விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, குடிமராமத்து பணி மேற்கொள்வதன் மூலம் மழைக் காலத்தில் கண்மாயில் உடைப்பு ஏற்படாமல் இருக்க வழிவகை ஏற்படும். மேலும் கண்மாயை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். விவசாயம் செழிக்கும் என்றார்.
ஆய்வின்போது உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், பொதுப்பணித் துறை மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ்வரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story