தொழிலாளி கொலையில் 3 பேர் சிக்கினர்: மனைவி-மகளை கேலி செய்தததை தட்டி கேட்டதால் கொன்றதாக வாக்குமூலம்


தொழிலாளி கொலையில் 3 பேர் சிக்கினர்: மனைவி-மகளை கேலி செய்தததை தட்டி கேட்டதால் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 15 Aug 2019 4:30 AM IST (Updated: 15 Aug 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று முன்தினம் இரவு தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவரது மனைவி-மகளை கேலி செய்ததை தட்டி கேட்டதால் கொலை செய்ததாக அவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

மதுரை,

மதுரை மதிச்சியம் ஆர்.ஆர்.மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ஹேமலதா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் கடையில் சாப்பாடு வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது 3 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மணிகண்டனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். இதில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரை செல்லூர் அகிம்சாபுரம் 4-வது தெருவை சேர்ந்த உமாமகேசுவரன்(21), இவரது நண்பர்கள் மதிச்சியத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம்(22), மாரிமுத்து(23) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வைகை ஆறு பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் பிடிபட்ட 3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணிகண்டனின் மனைவியும், மகளும் வைகை ஆற்றுக்குள் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த உமாமகேசுவரன், அவர்களை கேலி-கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. எனவே மனைவி-மகளை கேலி செய்த உமாமகேசுவரனை மணிகண்டன் தட்டி கேட்டார். மேலும் ஆத்திரமடைந்த அவர், உமா மகேசுவரனை சரமாரியாக தாக்கினார். அன்றைய தினத்தில் இருந்து இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் தான் ஆத்திரத்தில் மணிகண்டனை கொலை செய்ததாக தெரிவித்தனர்.

Next Story