பெண்ணாடம் அருகே, மாரியம்மன் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகை திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பெண்ணாடம் அருகே, மாரியம்மன் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகை திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Aug 2019 4:15 AM IST (Updated: 15 Aug 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே மாரியம்மன் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள கோனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 5-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் இரவில் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் நிர்வாகிகள் அம்மனை கோவில் முன்பு வாகனத்தில் வைத்து விட்டு சென்றனர். பின்னர் நேற்று மதியம் மஞ்சள் நீராட்டு விழாவையொட்டி சாமி வீதி உலா நடைபெற இருந்தது. இதையொட்டி சாமி அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. அப்போது அம்மன் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை காணவில்லை.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் இதுபற்றி பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அம்மன் சிலையை பார்வையிட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் அம்மன் சிலை மட்டும் இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story