கடலூர் கலெக்டர் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
வருவாய்த்துறை அலுவலர்களின் ஊழியர் விரோத போக்கை கையாளும் அலுவலக மேலாளர்(பொது), கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது), நிலஎடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரி(தேசியநெடுஞ்சாலை) ஆகியோரை கண்டித்தும், பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் செய்வதை கண்டித்தும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கடலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று காலை இந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஜான்பிரிட்டோ, மாநில செயலாளர் பிரேம்சந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
இந்த நிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்த இருப்பதை அறிந்த மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் ஆகியோர் வருவாய்த்துறை அலுவலர் சங்கநிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தின் 1-வது மாடியில் வருவாய்த்துறை அலுவலர்கள் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக்கோரி கோஷம் எழுப்பினர். இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர்கள் பூபாலசந்திரன், ஸ்ரீதரன், ஜான்சிராணி, இணை செயலாளர்கள் ஆனந்தி, செல்வம், சிவகுமார், வேணுகோபால், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.
Related Tags :
Next Story