ஜனவரி மாதம் முதல் இதுவரை பெங்களூருவில் 5,006 பேருக்கு டெங்கு பாதிப்பு
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பெங்களூருவில் 5,006 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மேயர் கங்காம்பிகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெங்களூரு நகரில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுப்பது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பது குறித்து நேற்று பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே தலைமையில் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் பத்ரேகவுடா, 8 மண்டலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மேயர் கங்காம்பிகே பேசும்போது கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மொத்தம் 5,006 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிழக்கு மண்டலம், மகாதேவபுரா மற்றும் தெற்கு மண்டலங்களில் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களூரு மாநகராட்சி எல்லையில் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பரவும் 50 வார்டுகள் கணடறியப்பட்டுள்ளது. இதில் ஒரு வார்டுக்கு 4 தன்னார்வலர்கள் என்று 50 வார்டுகளுக்கு மொத்தம் 200 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இதில் ஒருவருக்கு மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். குறிப்பாக வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. இதனால் குடிநீர் சேகரிப்பு மையங்களை முறையாக பாதுகாக்க வேண்டும். வீடுகள் மற்றும் பொது இடங்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து ஆட்டோவில் பிரசாரம் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
கடந்த மாதம்(ஜூலை) 15-ந் தேதியில் இருந்து இதுவரை பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகள் என்று 24 டன் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். வியாபாரிகளிடம் இருந்து ரூ.2.80 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
காகித பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு பதில் எதை பயன்படுத்தலாம் என்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் அடுத்தமாதம் தொடக்கத்தில் 3 நாட்கள் ‘பிளாஸ்டிக் மேளா‘ என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
மார்க்கெட்டுகளில் அதிகளவில் பிளாஸ்டிக் புழக்கம் இருப்பதாக புகார் வந்துள்ளது. இதனால் அடுத்தவாரம் முதல் மார்க்கெட்டுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story