ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீ: மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீ: மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Aug 2019 4:41 AM IST (Updated: 15 Aug 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

நெல்லை,

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைக்கிடங்கு ராமையன்பட்டியில் உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி வருகிறது. இதனால் ஏற்படும் புகையால் அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் சங்கரன்கோவில் ரோட்டில் வாகனத்தில் செல்ல முடியாத வகையில் புகை மண்டலமாக காட்சி அளிக்கும். இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி குப்பைக்கிடங்கில் தீப்பிடித்தது. ஒரு வார காலமாக தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் இன்னும் புகை வந்த வண்ணம் தான் உள்ளது.

இந்தநிலையில் மாநகராட்சி ஊழியர்கள் தான் குப்பைக்கிடங்கில் தீ வைக்கிறார்கள் என்று கூறியும், இந்த குப்பைக்கிடங்கால் ராமையன்பட்டி பகுதி குடிதண்ணீர், நிலத்தடி நீர் மாசுபடுகிறது என்று கூறி அப்பகுதி மக்கள் மற்றும் மாவீரர் சுந்தலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பாட்டிலில் அடைத்து மாநகராட்சி அலுவலகத்துக்கு எடுத்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். அந்த மனுவில், “ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். நிலத்தடி நீர் மாசுபட்டுவிட் டது. பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த குப்பை எரிவதால் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். கடந்த 8-ந்தேதி பிடித்த தீ இன்னும் எரிந்து கொண்டு இருக்கிறது. இதை அணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ராமையன்பட்டி மாநகராட்சி குப்பைக்கிடங்கில் மாநகராட்சி ஊழியர்கள் தீ வைக்கக்கூடாது. இல்லை எனில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறி உள்ளனர்.


Next Story