பெரம்பலூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்


பெரம்பலூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
x
தினத்தந்தி 16 Aug 2019 4:30 AM IST (Updated: 16 Aug 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 73-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு தேசியகொடியை ஏற்றிவைத்தார். பின்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், ஊர்க்காவல் படைவீரர்கள், என்.சி.சி., சாரணர் இயக்கம், ஜூனியர் ரெட்கிராஸ் இயக்கம், தேசியபசுமைப்படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் சமாதான புறாக்களை பறக்கவிட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் மனைவி, அவர்களது வாரிசுகள் 18 பேருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அத்துடன் பாராட்டும் வகையில் பணிபுரிந்தமைக்காக 25 போலீசார், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 38 அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

123 பயனாளிகளுக்கு...

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்பட்டோர், ஆதிதிராவிடர், சமூக நலத்துறைகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ உள்பட பல்வேறு அரசுதிட்டங்கள் வாயிலாக 123 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 825 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்ற தேசப்பற்று மிக்க கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொறுப்பு) நாகரத்தினம், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் அருளரங்கன் உள்பட அனைத்துத் துறைகளை சேர்ந்த அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த நீதிமன்றம்

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை மற்றும் சட்டப்பணிகள் துறை சார்பில் மாவட்ட செசன்சு நீதிபதி லிங்கேஸ்வரன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இதில் மாவட்ட குற்றவியல் நீதிபதி கிரி, சார்பு நீதிபதி வினோதா, குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற நீதிபதி அசோக்பிரசாத், மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், பயிற்சி நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story