கரூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் 165 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


கரூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் 165 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 8:25 PM GMT)

கரூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் 165 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

கரூர்,

இந்திய நாட்டின் 73-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கரூர் தாந்தோன்றிமலை யிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று காலை, மாவட்ட கலெக்டர் அன்பழகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை வேனில் சென்று பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து நாட்டுநலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை உள்ளிட்டவற்றை சேர்ந்த மாணவ, மாணவிகளும் அணிவகுப்பு நடத்தினர். அதனை தொடர்ந்து நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. தேசியக்கொடி நிறத்திலான பலூன் களையும் பறக்கவிடப்பட்டன. விழாவுக்கு வந்திருந்த பொதுமக் களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தியாகிகள் கவுரவிப்பு

அதனைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து வருவாய்த்துறையின் மூலம் 26 பேருக்கு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங் களின் மூலம் 97 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 16 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டத்தின் சார்பில் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.7½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என்பன உள்பட மொத்தம் 165 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 38 லட்சத்து 68 ஆயிரத்து 801 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்கினார். இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்கள், காவல்துறையினர், ஊர்க்காவல்படையினர் உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப் பட்டது.

கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

அதனை தொடர்ந்து அரசு இசைப்பள்ளி, கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் விஜயலெட்சுமி வித்யாலயா பன்னாட்டு பள்ளி, காந்தி கிராமம் புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளி, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தாந்தோன்றிமலை அன்பாலயம் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி, கரூர் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பசுபதிபாளையம் சாரதா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது, இந்தியாவில் மதம், இனம், மொழி உள்ளிட்டவற்றால் வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என் பதில் ஒற்றுமையோடு செயல்படுவது குறித்து விளக்கி பாரத தாய் மற்றும் தேசியகொடிக்கு மரியாதை செய்து தேசப்பற்று பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடினர்.

விழிப்புணர்வு நாடகம்

மேலும் ஆங்கிலேயர்களிடம் நீண்ட நாட்களாக இந்தியா அடிமை பட்டிருந்த போதும், சுதந்திர காற்றினை சுவாசிக்க காந்தி, நேரு, காமராஜர், சுபாஷ்சந்திரபோஸ் போன்ற தலைவர் களின் போராட்டம் குறித்து மாணவர்கள் விளக்கி நடனம் ஆடியது காண்போரை கவரும் விதமாக இருந்தது. அடிக்கடி செல்போன் பேசுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, செய்கை மூலம் மாணவ, மாணவிகள் நடித்து காட்டிய விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால், நீரினை பாதுகாப்பதன் அவசியம் குறித்து நீரின்றி அமையாது உலகு என்கிற தலைப்பில் விவசாயத்தை போற்றும் விதமாக பாரம்பரிய நடனங்களை ஆடி மாணவ, மாணவிகள் அசத்தினர். மேலும் காது கேளாத, வாய் பேசமுடியாது மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் சாகச நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட கலெக்டரின் உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சந்தியா (கரூர்), லியாகத் (குளித்தலை), உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேந்திரன், முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன் உள்பட அரசு அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story