வேலூரில் சுதந்திர தின விழா: கலெக்டர் சண்முகசுந்தரம் தேசிய கொடியேற்றினார் - ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன


வேலூரில் சுதந்திர தின விழா: கலெக்டர் சண்முகசுந்தரம் தேசிய கொடியேற்றினார் - ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 15 Aug 2019 9:30 PM GMT (Updated: 15 Aug 2019 9:03 PM GMT)

வேலூரில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம் தேசிய கொடியேற்றி வைத்து, ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேலூர், 

இந்தியாவின் 73-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேலூரில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு காலை 9.10 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும் அவர் பறக்கவிட்டார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் சண்முகசுந்தரம் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உடன் இருந்தார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி கவுரவித்தார்.

அதன்பின்னர் பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 203 ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், தேசிய அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை, சமூகநலத்துறை, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ ஆகிய துறைகளின் மூலம் 68 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரத்து 684 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுதந்திர தினத்தை போற்றும் வகையிலும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோட்டை முன்பு உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்திலும் அவர் தேசிய கொடியேற்றி வைத்தார்.

வேலூர் நேருபூங்கா எதிரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க பார்வையற்ற பள்ளிக்குழந்தைகள் மையத்தில் கலெக்டர் தேசிய கொடியேற்றிவைத்து, அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் கிருஷ்ணாநகரில் உள்ள அலுவலர் குழுவளாகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தேசிய கொடியேற்றினார்.

இதேபோல் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் கமிஷனர் சிவசுப்பிரமணியன் தேசிய கொடியேற்றினார். இதில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி உதவி கமிஷனர்கள் மதிவாணன், செந்தில், நகர்நல அலுவலர் கண்ணன், மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story